Sunday, 30 October 2011

பூக்கள் பூக்கும் தருணம்(2)


"பிடிக்கல. இப்ப நீ வர போறீயா இல்லையா?" சற்று குரலை உயர்த்தி அதட்டுவது போல் பேசினான். அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. அவன் பின்னாடியே சென்றாள். வாகனத்தில் ஏறியவன் இரண்டு நிமிடம் கழித்து,
"படம் முடிஞ்சுட்டா அதுக்குள்ள?". அவனின் தேவையில்லாத கோபம் நீடித்தது 5 நிமிடங்களுக்கு மட்டுமே. கோபம் குறைந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வருத்தம், கவலை, பயம் அவள் மனதில் ஒட்டி கொண்டது.

"ஆமா...படம் முடிஞ்சுட்டு" என்றாள் கவிநா.
"ஓ அப்படியா...ம்ம்ம்...கடைசில என்ன ஆச்சு. சாரி கவிநா...மறந்துட்டேன்," என்று கேள்வி கேட்வனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த கவிநா,
"கஷ்ட காலம் முடிஞ்சு சந்தோஷமா வாழந்தாங்க." என்றாள் வாகனத்தை ஓட்டியபடி.

"ஓ நம்ம காதல் மாதிரி." கிரீஷ் அவளைப் பார்த்து சொன்னான்.
வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வழியில், அவர்கள் ‘பாட்டில் திரி’ பூங்காவை கடந்து சென்றனர். உடனே கிரீஷ்,

"கவி, கொஞ்ச நேரம் பூங்காவுல உட்காந்து இருந்துட்டு போலாமா?" என கெஞ்சினான்.

அவன் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இருவரும் பூங்காவிற்கு சென்றனர். மெல்லிய குளிர் காற்று. வெயில் இல்லை. இயற்கையை ரசிக்க அருமையான தருணம். மேகங்களை உடைத்து கொண்டு மழைத்துளிகள் எந்நேரமும் கீழே விழ தயாராக இருந்தன. ஆனால், இந்த காதல் ஜோடியை பார்த்த பிறகு அவை சற்று நேரம் காத்திருந்தன.

ஒரு மரத்தடிக்கு பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட நாற்காலி இருந்தது. அங்கே அமர்ந்தனர் கவிநாவும் கிரீஷும். அவ்வளவாக கூட்டமில்லை. பூங்காவில் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அவர்களைப் பார்த்து கிரீஷ், "எனக்கும் இந்த மாதிரி இரண்டு குட்டி தேவதை வேணும்."

குழந்தைகள் வேண்டும் என்று குழந்தைபோல் அவன் கேட்பதை ரசித்தாள். அவனைப் பார்த்து கேட்டாள்," என்னைய மாதிரி அழகா வேணுமா? இல்ல கொஞ்ச அழகு குறைவா வேணுமா?"

 
"உன்னைய மாதிரியே வேணும்,"என்றவன் கவிநாவின் உள்ளங்கையை பிடித்து,
"இங்க பார்த்தியா?
இந்த சின்ன ரேகையும் இங்க இருக்குற பெரிய ரேகையும் மீட் பண்ணிக்குது. அப்ப கண்டிப்பா நமக்கு இரண்டு பொண்ணுங்க தான் பொறக்கும் நான் நினைச்ச மாதிரியே."

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவள் தொடர்ந்தாள், "ஏன், இரண்டு பொண்ணுங்க மட்டும்? ஆண்பிள்ளை வேண்டாமா?"

"இல்ல பொண்ணுங்க தான், அவங்க அப்பாவ நல்லா பாத்துப்பாங்க,” என்று முடித்தான்.
கவிநா அவன் முகத்தை பார்த்து சிரித்தபடி, "அப்ப என்னைய பாத்துக்க?"

"நான் இருக்கேன்," என்று கிரீஷ் சொன்னபோது அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

"நான் உன் மேல வச்சுருக்க காதல் அதிகம்னா நமக்கு பெண் குழந்தை பொறக்கும். நீ என் மேல வச்சுருக்கு காதல் அதிகம்னா ஆண் குழந்தை பொறக்கும்., என்றான் உற்சாகத்தோடு. கவிநா, "இரண்டு காதலும் சமமா இருந்தா..?" புருவங்களை சுருக்கி.

ஒரு வினாடி யோசித்தவன், "இரட்டை குழந்தைங்க தான். ஒன்னு பொண்ணு. இன்னோன்னு ஆண் குழந்தை." என்று பதில் சொன்னவனின் கண்களைப் பார்த்து வெட்கப்பட்டாள். இந்த பொழுது இப்படியே இருக்கவேண்டும். உலகில் வேறு எதுவும் வேண்டாம். இவன் பேசுவதை வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்று உள்ளூர ஆசைகள் பெருக்கெடுத்து ஓடின கவிநாவின் மனதில்.
"கவி, பசிக்குது எனக்கு. அங்க காபி ஷாப் இருக்கு. எதாச்சு சாப்பிடலாமா?" என்று கேட்டான் கொஞ்ச தூரத்திலுள்ள கடையை சுட்டிக்காட்டி. இருவரும் அங்கு சென்று உணவை தேர்வு செய்தனர்.
                                                             
கவிநாவின் கைபேசி அப்போது ஒலித்தது. கைபேசியில் அழைப்பவரின் பெயர் தெரிந்தது- மருத்துவர் ரவிராஜ். கைபேசியை எடுத்தாள், அப்போது அங்க வந்த உணவு உபசரிப்பாளரிடம் கிரீஷ் பேசி கொண்டு இருந்தான். வேறு பக்கம் திரும்பி, அமைதியான குரலில் கவிநா,

"ஹலோ அங்கிள், சொல்லுங்க." கவிநா அப்பாவின் நண்பர் மருத்துவர் ரவிராஜ்.

No comments:

Post a Comment