Sunday, 30 October 2011

பூக்கள் பூக்கும் தருணம்(4)


மறுபடியும் கிரீஷுக்கு தொடர்பு செய்து பார்த்தாள் கவிநா. அவன் எடுக்கவில்லை. பயம் அவளை கவிக்கொண்டது. உடல் முழுக்க வேர்வை துளிகள். உடனே எல்லாம் வேலையை போட்டுவிட்டு, வாகனத்தில் ஏறி வீட்டிற்கு சென்றாள். செல்லும் வழியில், மருத்துவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு செய்ய முயற்சி செய்தபோது அவள் கைபேசியில் பெட்ரி இல்லாமல் போனது.

மனம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டினாள். அவள் எண்ணம் கிரீஷை பற்றியே இருந்ததால் சாலையை சரியாக கவனிக்கவில்லை. சாலையில் கிடந்த ஒரு பெரிய பலகையை கவனிக்காமல் அதன் மேல் ஓட்டிச் சென்றாள் கவிநா. பலகையில் பலவித ஆணிகள் இருந்தன.

அடுத்த நொடி, வாகனத்தின் முன் டயர் கிழிந்துவிட்டது. அவளின் பயம் அதிகரித்து அவளை பிடிங்கி திண்ண ஆரம்பித்தது. அழுகை ஒரு புரம், வாகனத்தின் மேல் கோபம் ஒரு புரம்- இப்படி அவள் பல உணர்ச்சிகளின் நடுவே பந்தாடப்பட்டாள். வாகன உந்து வண்டிக்கு அழைப்பு விடுத்தாள். அரை மணி நேரம் கழித்து தான் வந்தது வாகன உந்து வண்டி.

வீட்டை அடைந்தாள்.பணத்தை எண்ணகூட நேரத்தை வீணாக்காமல், பணநோட்டுகளை ஓட்டுனர் கையில் திணித்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் வழியும் வேகத்தைவிட அவளின் கால் ஓடிய வேகம் அதிகம். மின்தூக்கி இடத்திற்கு சென்றால் ‘மின்தூக்கி உபயோகத்தில் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. அவளின் இதயதுடிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஏழு மாடி ஏறினாள். வீட்டு கதவு அருகே வந்தபோது, ஆச்சிரியம்!

கதவு திறந்து இருந்தது.உயிர் போவதுபோல் இருந்தது கவிநாவுக்கு. கதவை திறந்துகொண்டே கிரீஷை சத்தம் போட்டுக் கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை. ஒரே இருளாக இருந்ததால் அவள் விளக்கு பொத்தானை தேடினாள்.

அவள் அழுத்த,வெளிச்சம் வந்தது. அதே நேரம் அவள் மேல் வண்ணபூக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே சமயம் ஒரு உருவம் அவள் பின்னாடியிலிருந்து கட்டிபிடித்தது.

அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஒரு நிமிடம் ஆனது.

"என்ன இது கிரீஷ்?" அழுகையின் நடுவே கவிநா.

" மன்னிச்சிக்கோ கவி, சாரி... சாரி.." என பலமுறை மன்னிப்பு கேட்டான்.

"இது என்ன விளையாட்டு? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?" அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள்.

"என்ன கவி இது? இதுக்கு போய். சாரி சாரி,நீ இவ்வளவு பயப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா நான் செஞ்சு இருக்க மாட்டேன்,” என்று கவிநாவின் கூந்தலை வருடிகொண்டே மன்னிப்பு கேட்டான்.

"இனிமேலு இப்படி செய்ய மாட்டேன்." அவன் குரல் சோர்வானது. கிரிஷுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி அவளைச் சாந்தப்படுத்தியது. கண்களைத் துடைத்து கொண்ட கவிநா அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்,

"இனிமேல் ப்ளீஸ் இப்படி செய்யாதே! ஆமா, என்ன நடக்குது கிரீஷ்?” வண்ணப்பூக்கள் ஒன்றை கையில் எடுத்தவாறு கேட்டாள். கவிநா தனனை மன்னித்துவிட்டாள் என்ற உற்சாகத்தோடு கிரீஷின் முகம் பொலிவானது.

அப்போது மணி 12 ஆனாது. சுவரில் இருந்த கடிகாரம் ஒலி எழுப்பியது. இருவரும் அதை பார்த்தனர். அச்சமயம் கிரீஷ் கவிநா காது அருகே
"பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று சொல்லியவாறு, தன் சட்டை பையில் இருந்த ஒரு சின்ன பரிசு பொருளை அவளுக்குக் கொடுத்தான்.

ஆச்சிரியத்துடன் அதை வாங்கி கொண்ட கவிநா அதை திறந்து பார்த்தாள்- வைரத்தால் செய்யப்பட்ட ஒரு சங்கிலி. சங்கிலியை அலங்கரிக்கும் வகையில் ‘இதயம்’ வடிவம் அதில் பொரிக்கப்பட்டிருந்தது.

"ஏற்கனவே ஒரு முறை என் இதயத்தையே கொடுத்துவிட்டேன். இது இரண்டாவது முறை," என்று சிரித்தபடியே கிரீஷ் கவிநாவை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.

மெழுகுவர்த்திகள், பூக்கள், பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது மேசை. அதன் மேல் ஒரு கேக். கேக்கில் ரோஸ் வண்ண கீரிமால் எழுதியிருந்தது- ‘என் கவிநாவிற்கு, பிறந்தநாள் வாழ்த்துகள்.’ ஆனந்தத்தால் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. கேக் வெட்டிமுடித்தபின் கவிநா,
"எதுக்கு கிரீஷ் இதலாம்? "

“இன்னும் இருக்கு நிறைய. வா," என்றவன் கவிநாவை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான். அந்த முழு அறையையே அழகிய ரோஜாக்களால் அலங்காரம் செய்து இருந்தான். அதை கண்டு பூரிப்பு அடைந்தவள் படுக்கையில் உட்கார்ந்தாள். இன்னொரு பரிசு ஒன்றை தந்தான். அவளையே ஓவியமாய் வரைந்த ஒரு படம்- அதன் கீழே ஒரு கவிதை.

 
ஒரு கவிதையே
என் கவிதையை
படிக்க நான் தவம்
செய்திருக்கவேண்டும்.
ஒரு ஓவியத்தையே
நான் ஓவியமாய்
வரைய வரம்
பெற்றிருக்கவேண்டும்!


அவள் படித்து முடிக்கும் வேளையில் படுக்கையில் இருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி, "நீ தான் என் தேவதை" என்றான் மன்றாடும் தோரணையில். கிரீஷை அணைத்தபடி தேம்பி தேம்பி அழுதாள். ஆனந்த கண்ணீர் விட்டாள்.

எல்லாவற்றையும் ரசித்தாள் அவனுக்காக, அன்று உண்மையாகவே அவள் பிறந்தநாள் இல்லை என்றபோதிலும்!
*******************************************************************************************************

பூக்கள் பூக்கும் தருணம்(3)



மறுமுனையில் மருத்துவர், "ஹாய் கவிநா, எப்படி இருக்க? நான் இன்னிக்கு வீட்டுக்கு வரலாமா? என்கூட ஒருத்தர் வராங்க. அவங்க பெயர் செல்வி ரதி, ‘இன்றைய இளையர்கள்’ பத்திரிக்கையில் வேலை பார்க்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டி உங்கள பத்தி...” என்றவர் முழுவதையும் சொல்லி முடித்தார்.

சற்று யோசனைக்கு பிறகு கவிநா, "கண்டிப்பா, வாங்க அங்கிள்."

மருத்துவர், "கிரீஷ் ,இப்ப பரவாயில்லையா?" என்று வினாவினார்.

மாலை மணி 7. சோபாவிலுள்ள அலங்கார பொருட்களைச் சரிசெய்தாள். "வாங்க அங்கிள், வாங்க...." வரவேற்றாள் கவிநா. பின்னாடியே பத்திரிக்கையாளர் ரதியும் வந்தார். முதன் முறையாக சந்திப்பதால், ரதியும் கவிநாவும் கை குலுக்கி கொண்டனர். கிரீஷ் இருக்கிறானா என்று சுற்றுபுரத்தை ஒரு முறை நன்கு பார்த்தபடி மருத்துவர், “எங்க கிரீஷ்?"

வெளியே சென்றுவந்ததால் களைப்பாக உள்ளதாக சொல்லிவிட்டு உறங்கி கொண்டிருக்கிறான் கிரீஷ் என்ற விஷயத்தை கூறினாள் கவிநா. மூவரும் சோபாவில் உட்கார்ந்தனர். "எங்க பத்திரிக்கையில இந்த மாதத்தில ஒரு சிறப்பு கட்டுரை ஒன்னு போடுறோம். வித்தியாசமான தம்பதிகளை பத்தி. அதான் உங்கள பத்தி எழுதலாமேன்னு வந்தேன். கவலை வேண்டாம், உங்க பெயர்கள் எல்லாம் ரகசியமாய் இருக்கும். பெயர்களை வெளியிட மாட்டோம்," என்றார் ரதி. பேசி கொண்டே தனது பையிலிருந்த பேனாவை எடுத்தார்.

"உங்கள பத்தி... கிரீஷ பத்தி....?" நேரடியாக கேள்வியை கேட்க ஆரம்பித்தார் ரதி.

" கிரீஷுக்கு அக்கியூட் சிஸ்சோஃர்னியா டிஸ்சார்டர்(acute schizophrenia disorder)," தழுதழுத்த குரலில் கவிநா.

"இது எப்படி? கேள்விப்படாத ஒரு டிஸ்சார்டர் மாதிரி இருக்கு. ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?" ரதி தனது பேனாவிற்கும் தாட்களுக்கும் வேலை வைத்தார்.

"இந்த குறைபாடு உலக ஜன தொகையில 1% மேல் இருக்கு. அமெரிக்காவுல மட்டும் 2.7 மில்லியன் மக்களுக்கு இந்த குறைபாடு இருக்கு. ஏன் எப்படின்னு சரியான ஒரு குறிப்பிட்ட காரணம் சொல்ல முடியாது. மூளையின் பாதிப்பு, சின்ன வயசுல சரியான ஊட்டசத்து இல்லாதது, மனம் உளைச்சல் -இப்படி பல காரணங்கள் இருக்கலாம," என்று விளக்கினார் மருத்துவர் ரவிராஜ்.

அவர் தொடர்ந்து, " இப்படி உள்ளவங்களுக்கு பேசும் முறை, பாணி, சிந்தனை, அதை வெளிபடுத்தும் விதம்- இப்படி நிறைய வகையில பாதிப்பு இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி கூட வரும். ரொம்ப நேரத்துக்கு அவங்க அவங்களாவே இருக்க மாட்டாங்க. ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு சரியா போயிடும்."

"ஒரு விஷயம் நடந்த மாதிரி பேசுவாங்க. இன்னிக்கு பாருங்க ஞாயிற்றுகிழமை. தபால்காரன் வந்துட்டு போனார்னு சொன்னார் கிரீஷ். திடீரென்னு யாரோ மூளைக்குள்ள வந்த மாதிரி அவங்களிடம் பேசிகிட்டு இருப்பாரு. இன்னிக்குகூட வெளியே போகும்போது அப்படி இருந்தாரு. கொஞ்சம் பயமாகவும் இருக்கும் ஆனா பாவமாகவும் இருக்கும்." என்று கவிநா சொல்ல சொல்ல, அவள் கண்கள் சற்றே குளமாகின.

"மருந்தால இத குணப்படுத்த முடியுமா டாக்டர்?" ரதி அடுத்த கேள்வியை வீசினார்.

"இதற்கு முழுமையான தீர்வு கிடையாது. ஆனா, பாதிப்பு அளவை குறைக்க முடியும். கிரீஷ்கூட முன்பு ரொம்ப முரட்டுத்தனமா நடந்துப்பார். ரொம்ப நேரம் கத்துவார். கோபம்கூட ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். இப்போ மருந்து சாப்பிடுறாரு. அதனால இப்ப ரொம்ப மாறிகிட்டு வறார்.” ரதியைப் பார்த்தார் கூறினார் மருத்துவர்.

"ஆமா அங்கிள், இப்போ பரவாயில்லை. நீங்க
கொடுத்த மருந்துகளை, சாதாரண ஊட்டச்சத்து மாத்திரைனு சொல்லி கிரீஷ்கிட்ட கொடுத்துட்டு வறேன். நிறைய மாற்றம் இருக்கு..." நன்றியுணர்வுடன் கவிநா.

"இப்படி ஒருவரை கல்யாண பண்ணிக்க...." கேள்வியை கேட்கலாமா இல்லை வேண்டாமா என்ற ஒரு தோரணையில் இழுத்தார் ரதி. புரிந்து கொண்ட கவிநா,

"மூனு வருஷ காதல். எப்படிங்க அப்படியே விட்டுட முடியும். இந்த ஒரு காரணத்துனால அவர வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல. கல்லூரி முதல் ரெண்டு வருஷம் அவர் நல்லா தான் இருந்தார். அதுக்கு அப்பரம் தான் மூணாவது வருஷம் தான் எனக்கு தெரிய வந்துச்சு..."

"தனக்கு இப்படி ஒரு குறைப்பாடு இருக்குன்னு கிரீஷுக்கு...." கேள்வியை ரதி முடிப்பதற்குள்,

கவிநா முடித்தாள்- "கிரீஷுக்கு தெரியாது!"

மருத்துவர், "பொதுவா இந்த டிஸார்டர் உள்ளவங்களுக்கு, தான் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம்ன்னு தெரியாது," என விளக்கினார். அவர் சொல்வதை வேகமாய் தாளில் கிறுக்கினாள் ரதி. "முழு நேரமும் அவர்கூடவே இருக்கனுமே கஷ்டமா இல்லையா? நீங்க வேலைக்கு போகும்போது எப்படி?"

குளமாகிய கண்களை துடைத்தவாறு கவிநா, "அவர்கூட இருக்கறது தான் எனக்கு சந்தோஷம். அவரை முழு நேரம் கவனிக்க வேணும் என்பதால், நான் இரவு வேலை பாக்குறேன். ராத்திரி 9 மணிக்கு எல்லாம் தூங்க வச்சுடுவேன் கிரீஷை. அதுக்கு அப்பரம் தான் வேலைக்கு கிளம்புவேன்."

மருத்தவர் சொன்னவற்றையும் கவிநா சொன்னவற்றையும் ரதி வேகமாய் குறிப்பு எடுத்துக் கொண்டார்.

கவிநா, "கிரீஷுக்கும் வேலைக்கு போகனும்னு ஆசை தான். ஆனா, அவரால மத்தவங்ககிட்ட வேலை பாக்க முடியல.
 
அதான் நேரம் கிடைக்கும்போது புகைப்படம் எடுப்பாரு. படம்கூட அழகா வரைவார் கிரீ," என்றவள் அங்கிருந்த சுவரில் இருந்த ஒரு அழகான படத்தை காட்டி,

"இது அவர் வரைஞ்ச படம் தான்." பெருமிதத்தோடு சொன்னாள்.

சிறு புன்னகையுடன் ரதி, கவிநாவை பார்த்து, "நீங்க ரொம்ப வித்தியாசமானவர்."

"ரொம்ப நன்றி டாக்டர். ரொம்ப நன்றி கவிநா. ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பார்த்ததில் " கவிநாவும் ரதியும் கைகுலுக்கி கொண்டனர். ரதி விடைபெற்றுக் கொண்டாள். டாக்டர் கிளம்பும் முன்,

"கிரீஷ பாத்துக்கோ. மாற்றம் தெரிஞ்சாலும்,ஜாக்கிரதையா இரு கவிநா.எந்த ஒரு சீரியஸான விஷயம் அவன பாத்திகாத அளவில் பார்த்துக்கோ .ஏதாவுதுன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ணு," அக்கறையுடன் சொன்னார்.

இரவு வேலைக்கு கிளம்பும் நேரம் வந்தது. கவிநா வேலைக்குக் கிளம்பும்முன், கிரீஷ் உறங்கி கொண்டு தான் இருக்கிறானா என்பதை ஒரு முறை அறை கதவை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டாள். தனது வேலை இடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். அப்போது இரவு மணி 11.00 


                                    அவளது கைபேசி மணி ஒலித்தது.
மறுமுனையில் கிரீஷ்,
"கவிநாஆஆஆஆஆஆ!!!" என்று அலறினான். அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவன் தொலைபேசியின் தொடர்பை துண்டித்தான்.

பூக்கள் பூக்கும் தருணம்(2)


"பிடிக்கல. இப்ப நீ வர போறீயா இல்லையா?" சற்று குரலை உயர்த்தி அதட்டுவது போல் பேசினான். அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. அவன் பின்னாடியே சென்றாள். வாகனத்தில் ஏறியவன் இரண்டு நிமிடம் கழித்து,
"படம் முடிஞ்சுட்டா அதுக்குள்ள?". அவனின் தேவையில்லாத கோபம் நீடித்தது 5 நிமிடங்களுக்கு மட்டுமே. கோபம் குறைந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு வருத்தம், கவலை, பயம் அவள் மனதில் ஒட்டி கொண்டது.

"ஆமா...படம் முடிஞ்சுட்டு" என்றாள் கவிநா.
"ஓ அப்படியா...ம்ம்ம்...கடைசில என்ன ஆச்சு. சாரி கவிநா...மறந்துட்டேன்," என்று கேள்வி கேட்வனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த கவிநா,
"கஷ்ட காலம் முடிஞ்சு சந்தோஷமா வாழந்தாங்க." என்றாள் வாகனத்தை ஓட்டியபடி.

"ஓ நம்ம காதல் மாதிரி." கிரீஷ் அவளைப் பார்த்து சொன்னான்.
வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வழியில், அவர்கள் ‘பாட்டில் திரி’ பூங்காவை கடந்து சென்றனர். உடனே கிரீஷ்,

"கவி, கொஞ்ச நேரம் பூங்காவுல உட்காந்து இருந்துட்டு போலாமா?" என கெஞ்சினான்.

அவன் கெஞ்சலுக்கு முடியாது என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இருவரும் பூங்காவிற்கு சென்றனர். மெல்லிய குளிர் காற்று. வெயில் இல்லை. இயற்கையை ரசிக்க அருமையான தருணம். மேகங்களை உடைத்து கொண்டு மழைத்துளிகள் எந்நேரமும் கீழே விழ தயாராக இருந்தன. ஆனால், இந்த காதல் ஜோடியை பார்த்த பிறகு அவை சற்று நேரம் காத்திருந்தன.

ஒரு மரத்தடிக்கு பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட நாற்காலி இருந்தது. அங்கே அமர்ந்தனர் கவிநாவும் கிரீஷும். அவ்வளவாக கூட்டமில்லை. பூங்காவில் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அவர்களைப் பார்த்து கிரீஷ், "எனக்கும் இந்த மாதிரி இரண்டு குட்டி தேவதை வேணும்."

குழந்தைகள் வேண்டும் என்று குழந்தைபோல் அவன் கேட்பதை ரசித்தாள். அவனைப் பார்த்து கேட்டாள்," என்னைய மாதிரி அழகா வேணுமா? இல்ல கொஞ்ச அழகு குறைவா வேணுமா?"

 
"உன்னைய மாதிரியே வேணும்,"என்றவன் கவிநாவின் உள்ளங்கையை பிடித்து,
"இங்க பார்த்தியா?
இந்த சின்ன ரேகையும் இங்க இருக்குற பெரிய ரேகையும் மீட் பண்ணிக்குது. அப்ப கண்டிப்பா நமக்கு இரண்டு பொண்ணுங்க தான் பொறக்கும் நான் நினைச்ச மாதிரியே."

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவள் தொடர்ந்தாள், "ஏன், இரண்டு பொண்ணுங்க மட்டும்? ஆண்பிள்ளை வேண்டாமா?"

"இல்ல பொண்ணுங்க தான், அவங்க அப்பாவ நல்லா பாத்துப்பாங்க,” என்று முடித்தான்.
கவிநா அவன் முகத்தை பார்த்து சிரித்தபடி, "அப்ப என்னைய பாத்துக்க?"

"நான் இருக்கேன்," என்று கிரீஷ் சொன்னபோது அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.

"நான் உன் மேல வச்சுருக்க காதல் அதிகம்னா நமக்கு பெண் குழந்தை பொறக்கும். நீ என் மேல வச்சுருக்கு காதல் அதிகம்னா ஆண் குழந்தை பொறக்கும்., என்றான் உற்சாகத்தோடு. கவிநா, "இரண்டு காதலும் சமமா இருந்தா..?" புருவங்களை சுருக்கி.

ஒரு வினாடி யோசித்தவன், "இரட்டை குழந்தைங்க தான். ஒன்னு பொண்ணு. இன்னோன்னு ஆண் குழந்தை." என்று பதில் சொன்னவனின் கண்களைப் பார்த்து வெட்கப்பட்டாள். இந்த பொழுது இப்படியே இருக்கவேண்டும். உலகில் வேறு எதுவும் வேண்டாம். இவன் பேசுவதை வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்று உள்ளூர ஆசைகள் பெருக்கெடுத்து ஓடின கவிநாவின் மனதில்.
"கவி, பசிக்குது எனக்கு. அங்க காபி ஷாப் இருக்கு. எதாச்சு சாப்பிடலாமா?" என்று கேட்டான் கொஞ்ச தூரத்திலுள்ள கடையை சுட்டிக்காட்டி. இருவரும் அங்கு சென்று உணவை தேர்வு செய்தனர்.
                                                             
கவிநாவின் கைபேசி அப்போது ஒலித்தது. கைபேசியில் அழைப்பவரின் பெயர் தெரிந்தது- மருத்துவர் ரவிராஜ். கைபேசியை எடுத்தாள், அப்போது அங்க வந்த உணவு உபசரிப்பாளரிடம் கிரீஷ் பேசி கொண்டு இருந்தான். வேறு பக்கம் திரும்பி, அமைதியான குரலில் கவிநா,

"ஹலோ அங்கிள், சொல்லுங்க." கவிநா அப்பாவின் நண்பர் மருத்துவர் ரவிராஜ்.

பூக்கள் பூக்கும் தருணம் (1)

தனது காலை உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பினாள் கவிநா. சூரிய ஒளி ஜன்னல் வழி வீட்டினுள்ள சோபாவில் பட்டது. வீட்டினுள்ளே நுழைந்தவள் ஜன்னல் மறைவு துணியால் ஜன்னலை மூடினாள். வாசலில் இருந்து கொண்டு வந்த செய்தித்தாளை மேசையில் போட்ட படியே,
"கிரீஷ், ஏந்திரி! இன்னும் என்ன தூக்கம்? ஏந்திரி கிரீஷ்,"
என்று சொல்லி கொண்டே, அறையினுள் நுழைந்தாள் கவிநா. ஜன்னலை எட்டி பார்த்தபடி கிரீஷ் நின்று கொண்டிருந்தான்.

"ஓ ஏந்திரிச்சுட்டீயா? சரி குளிச்சிட்டு வா. உனக்கு என்ன வேணும்? காபியா டீயா?" என கேட்டுகொண்டே கலைந்திருந்த போர்வையை சரி செய்து மெத்தையில் வைத்தாள். ஜன்னல் வெளியே விட்ட பார்வையை கவிநா பக்கம் திருப்பி, கேள்வியை மறுபடியும் சொல்லியபடி கிரீஷ், "காபியா? டீயா? ம்ம்ம்...நீ போதும்!" என்று சிரித்தான்.

"என்னது??” மெத்தையில் கிடந்த தலையணையால் கிரீஷை செல்லமாய் அடித்தாள். காலை உணவு சாப்பிட அம்ர்ந்தான் கிரீஷ். அங்கிருந்த புகைப்பட ஆல்பத்தை திறந்து அதன் முதல் படத்தை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சமையல் அறையிலிருந்து ரொட்டியையும் காபியையும் எடுத்து வந்த கவிநா அவன் நிலைமையை புரிந்து கொண்டாள்.

அவன் அருகே சென்று, "கிரீஷ், இது நான். கவிநா. இது ராஜேஷ். இவ லீனா. நம்ம எல்லாரும் கல்லூரி படிக்கும்போது வெளியூர் போனோமே அப்ப எடுத்த படம். நீ தானே இந்த படத்த எடுத்த." என்று ஒரு குழந்தையிடம் பாடம் சொல்லி கொடுப்பது போல் ஒவ்வொன்றை மெதுவாய் அமைதியாய் சொன்னாள் கவிநா. கிரீஷ் அவளைப் பார்த்து புன்னகையித்தான்.

"சரி சாப்பிடு," என்று கவிநா கிரீஷின் கையில் காபியைக் கொடுத்தாள். மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தவளை கிரீஷ் கூப்பிட்டு "கவி, இன்னிக்கு தபால்காரன் வந்திருந்தான்."

அன்று ஞாயிற்றுக்கிழமை.

கவிநா ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள். மதியம் 12 மணி அளவில் இருவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு கிளம்பினார்கள். கொஞ்சம் தூரமான பயணம் என்பதால் கிரீஷை வாகனத்தை ஓட்டவிடவில்லை கவிநா. அவளே ஓட்டினாள். பக்கத்தில் அமைதியாய் வந்த கிரீஷ், திடீரென்று தனக்கு தானே பேசிகொண்டான்.

"ஆமாண்டா சொல்லு. நான் மார்ஸ்ல தான் இருக்கேன். நீ எங்க இருக்க இப்போ? ஓ..நிலாவிலா?" என்று ஒரு நண்பனுடன் பேசுவது போல் அவன் பேச்சுகள் அமைந்தன.

ஒரு வினாடி கழித்து யாரோ ஒரு பெண்மணியிடம் பேசுவது போல் "இந்த ஏரியா இங்க இல்ல. நீங்க விமானம் எடுத்து போகனும்." சிரித்தமுகத்துடன் தனது பேச்சுகளை தொடர்ந்தான் கிரீஷ். அவன் பேசும்போது அவனது பார்வை கீழேயே இருந்தது. அவ்வபோது கத்தி கூச்சல் போட்டான். ஆனால், வாகனத்தை ஓட்டி கொண்டிருந்த கவிநா அமைதியாய் இருந்தாள்.

கவிநா தனது கவனத்தை சாலையிலும் வைத்திருந்தாள் அதே சமயம் கிரீஷ் மேலேயும் இருந்தது. பாதுகாப்பு கருதி வாகன கதவுகளைப் பூட்டினாள். அவன் இருக்கும் மனநிலையை புரிந்த கொண்ட கவிநா ஏதும் சொல்லாமல் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, சுயநினைவுக்கு வந்தவனாய் அமைதியாய் மாறி போனான் கிரீஷ். சற்று நேரத்திக்கு முன் காணப்பட்ட கிரீஷுக்கும் இப்போது மாறிய கிரீஷுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

"ஏய் கவி, என்னமா ஒன்னுமே பேசாம வர,என்ன ஆச்சு?" என்றான் கிரீஷ் கியரின் மேல் விழுந்த துப்பட்டாவில் கைவைத்து. 'ஒன்னுமில்லை ' என்பதுபோல் அவனைப் பார்த்துப் புன்னகையித்தாள். "சும்மா,உன்னைய பத்தி நினைச்சுகிட்டு வந்தேன்." புன்னகை மாறாமல் சொன்னாள்.

"என்னைய பத்தி நினைச்சுகிட்டே இருக்க நான் என்ன உன் காதலனா? நான் உன் கணவன்!" என்று கூறி அவன் அடித்து நக்கலுக்கு அவனே சிரித்தான். விளையாட்டாய் முறைத்தாள் கவிநா.

"ஒகே சாரி. அடுத்த தடவ நல்ல ஜோக் அடிக்குறேன்" என்றதும் வாய் விட்டு சிரித்தாள் கவிநா.

ஈசூன் ஜீவி திரையரங்கை வந்து அடைந்தனர். 'அலைபாயுதே' படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இடைவேளையின் போது நிரம்பி வழிந்த கூட்டங்கள் கழிவறைக்கும் பாப்கார்ன் வாங்கவும் சென்றன.
"கவி, இந்த படத்த பார்க்கும்போது நம்ம கல்லூரி நாட்கள் ஞாபகத்திற்கு வருது. நம்ம காதல்ல ஜெயிக்க வைக்க எத்தன போராட்டம்?" என்றபோது கிரீஷ் குரலில் ஒரு வேதனை தெரிந்தது .


தொடர்ந்தான் கிரீஷ், "ஐ  லவ்  யூ கவி." அமர்ந்திருந்த நாற்காலியின் கைபகுதியில் வைத்திருந்த கவிநாவின் கைகளை இறுக்க பிடித்து கொண்டு.
புன்னகையைப் பதிலாய் தந்த கவிநா அவனின் தலைமுடியை அழகாய் கலைத்தாள்.
இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை படத்தை ரசித்து கொண்டிருந்த கிரீஷ், கவிநா காது அருகே சென்று "கவி, வா போவோம். படம் நல்லா இல்ல. எனக்கு பிடிக்கல."

சற்று குழம்பம் அடைந்த கவிநா "கிரீஷ், நீ தானே நல்லா இருக்குனு சொன்னேன் இப்போ..."



(பகுதி 2)